இன்று காலை 8.00 மணிக்கு அவருக்கு டெல்லியில் உள்ள திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.
முன்னதாக, தூக்குத் தண்டனை கைதி அப்சல் குருவில் கருணை மனுவை நிராகரித்து உத்தரவிட்டார் ஜனாதிபதி பிரணப் முகர்ஜி.
ஜனவரி இறுதியில் கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவலை மத்திய அரசு இன்று வெளியிட்டது.
நாடாளுமன்றத்தில் தாக்குதல் சம்பவம் நடந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த சம்பவத்தின் 11 ஆவது ஆண்டுதினம், கடந்த டிசம்பர் மாதம் 13ம் திகதி அனுசரிக்கப்பட்டது.
கடந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13ம் திகதி நாடாளுமன்றத்திற்குள் புகுந்த 5 தீவிரவாதிகள், சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதில், டெல்லி பொலிஸ் அதிகாரிகள் 5 பேர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.தாக்குதல் நடத்திய 5 பேரும் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடந்த ஓராண்டுக்கு பின்னர், இது தொடர்பாக, அப்சல் குரு உள்ளிட்ட 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
விசாரணைக்கு பின் அப்சல் குரு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.
அப்சல் குருவின் பின்னணி நாடாளுமன்ற தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர். மருத்துவப் படிப்பில் முதல் ஆண்டை முடித்த நிலையில், ஐஏஎஸ் தேர்வுக்கு தன்னை தயார் படுத்தி வந்தபோது, ஜம்மு காஷ்மீர் மாநில விடுதலை முன்னணியில் சேர்ந்து தீவிரவாத பயிற்சி பெற்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து காஷ்மீருக்கு திரும்பிய அவர், எல்லை பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தார்.
பின்னர், அவர் பிறந்த ஊரான சோப்பூரில், தொழில் தொடங்கி நடத்தி வந்தபோது அனந்தநாக் பகுதியை சேர்ந்த தாரிக் என்ற தீவிரவாதியுடன் தொடர்ப்பு ஏற்படுத்திக்கொண்ட அப்சல் குரு, மீண்டும் தீவிரவாத அமைப்பில் சேர்ந்தார். அப்போது காசியாபாத் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.
இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களை தாக்க இந்த தீவிரவாதிகள் திட்டமிட்டனர். இந்த தாக்குதல் திட்டங்களில் ஈடுப்படும் தீவிரவாதிகள் பாதுகாப்பாக தங்க உதவியளித்து வந்தார்.
கடந்த 2001ம் ஆண்டு நடைபற்ற நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுப்பட்ட தீவிரவாதிகளுக்கு அப்சல் குரு அடைக்கலம் அளித்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. இதனால் அவர் மீது நாட்டுக்கு எதிராக போர் புரிந்தாக குற்றம்சாட்டப்பட்டது.
காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி முகமது அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் ஜம்மு காஷ்மீரில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித செயல்களை தடுக்க மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஊரடங்கு உத்தரவால் ஸ்ரீநகர் உள்ளிட்ட மாநிலத்தின் பல இடங்களிலும் முள்வேலிகள் போடப்பட்டுள்ளன, போக்குவரத்தும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருக்கிறது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பை அதிகரித்துள்ள மாநில அரசு, பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.



|