டெல்லியில் கடந்த டிசம்பர் 16ம் திகதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி, 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட இந்த சோகம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவிக்கு நீதி கேட்டு இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் நாடுகளில் போராட்டங்கள் நடந்தன.
இதையடுத்து கற்பழிப்பு தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவிற்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பரிந்துரைகள் வந்த வண்ணம் உள்ளன.
சமீபத்தில் நாட்டிலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கடிதம் எழுதியிருந்தார்.
அதில், கற்பழிப்புக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்குவது குறித்த கருத்துக்களை கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த பா.ஜ.க, கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என கூறியிருந்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டிருந்த அறிக்கையில், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மற்றும் ரசாயன முறையிலான ஆண்மை நீக்கம் போன்ற தண்டனைகள் வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.
கற்பழிப்புக்கு எதிரான சட்டத்திற்கு உயிரிழந்த டெல்லி மாணவியின் பெயரை வைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் சசிதரூர் தனது டுவிட்டர் வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.
சசிதரூரின் இந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தபோதும், தற்போது மாணவியின் பெற்றோர் புதிய சட்டத்திற்கு தங்களது மகளின் பெயரை வைக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மாணவியின் தந்தை மற்றும் சகோதரர், கற்பழிப்புக்கு எதிரான சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டு அதற்கு மாணவியின் பெயரை வைப்பதற்கு தங்களுக்கு எவ்வித ஆட்சேபணை இல்லை என்றும், அது இறந்த மாணவிக்கு பெருமை தரும் செயல் என தெரிவித்தனர். |