விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும், இலங்கை இறுதிப் போரின்போது பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை இராணுவம் மீதும், அதிபர் மகிந்த ராஜபக்ஷ மீதும் பொது விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிருத்தி தமிழ்நாட்டில் சென்னையிலுள்ள நுங்கம்பாக்கத்தில் இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழர் அமைப்புகள் அறிவித்திருந்தன.
அதன்படி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உட்பட 500ற்கும் அதிகமானோர் டேங்க்ரோடு பகுதியில் திரண்டனர்.
இலங்கை அரசு, ராஜபஷாவுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டதோடு தொண்டர்களில் சிலர் ராஜபக்ஷாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பேசிய வைகோ, ஈழத் தமிழர்களை துன்புறுத்தி படுகொலை செய்த இலங்கை அரசின் தூதரகம் தமிழகத்தில் இருக்கக் கூடாது. இலங்கை துணைத் தூதரகத்தை அகற்றாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்றார்.
பழ. நெடுமாறன் பேசும்போது, இந்தப் போராட்டம் உலகத் தமிழர்களின் உணவுர்களை வெளிப்படுத்துகிறது என்றார்.
அதனைத் தொடர்ந்து இலங்கைத் தூதரகம் நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற அவர்களை பொலிசார் தடுத்து நிறுத்தினர். அதனையும் மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பழ. நெடுமாறன், வைகோ, வேல்முருகன் உள்பட சுமார் 500 பேரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர். |