ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அமலாபுரம் புல்பேட்டி குரு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரா (வயது 19) பொறியியல் கல்லூரி மாணவர் ஆவான்.
தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள கிரிக்கெட் சூதாட்ட கும்பலிடம் 'பெட்' கட்டி ரூ.5 லட்சம் வரை கடன்பட்டான்.
இந்த கடனை அடைப்பதற்காக பக்கத்து வீட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீனிவாசராவின் மகன் நாகவிவேகை(வயது 12) கடத்தினான்.
ரவிச்சந்திராவுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நாகவிவேக்கிற்கு சிறிது தூரம் சென்றதும் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தன்னை விட்டு விடுமாறு கூச்சலிட்ட சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்தான்.
பின்னர் பிணத்தை அங்கு உள்ள ஏரியில் வீசி விட்டு ரகசிய இடத்தில் பதுங்கி, விவேக்கின் தந்தை ஸ்ரீனிவாசராவுக்கு போன் செய்து ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளான்.
இதனால் பதறிப்போன ஸ்ரீனிவாச ராவ் பொலிஸில் புகார் செய்தார். பின்னர் பொலிஸார் அறிவுரைப்படி ரவிச்சந்திரா கூறிய இடத்திற்கு பணத்துடன் சென்றார்.
அங்கு நண்பர்களுடன் நின்று கொண்டிருந்த ரவிச்சந்திரா பொலிஸை கண்டதும் நண்பரின் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி விட்டான்.
இருப்பினும் அவனை பொலிஸார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அவனிடம் நடத்திய விசாரணையில் சிறுவனை கொலை செய்து விட்டராக ரவிச்சந்திரா தெரிவித்தான்.
இதைக்கேட்டு சிறுவனின் பெற்றோர்கள் கதறி அழுதனர். ஆவேசம் அடைந்த பொதுமக்கள் பொலிஸை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள்.
ரவிச்சந்திரா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
கிரிக்கெட் சூதாட்ட கடனை அடைக்க கல்லூரி மாணவர் ஒருவர் சிறுவனை கடத்தி கொலை செய்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. |