வெள்ளிக்கிழமை தங்கள் கட்சி சார்பில் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் எனவும் கூறினார். மேலும் அவர், நாட்டை விற்க ஐ.மு., கூட்டணி முயற்சி செய்வதாக மம்தா கூறியுள்ளார்.
மம்தா கெடு: கடந்த சில நாட்களுக்கு முன்னர் டீசல் விலை லீற்றருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டது. காஸ் சிலிண்டர்கள் மீதும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
ஆண்டுக்கு 6 சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே இனி மானிய விலையில் வழங்கப்படும் என அறிவித்தது. அத்துடன் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கும் அனுமதி வழங்கியது.
இதனால் அதிருப்தியடைந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த மூன்று முடிவுகளையும் வாபஸ் பெற வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார். இல்லையென்றால் கடுமையான முடிவு எடுக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்த கெடு நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த ஒரு சாதகமான முடிவும் வரவில்லை. இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,க்கள் கூட்டம் கோல்கட்டாவில் நடந்தது.
ஆதரவு வாபஸ்: இந்த கூட்டத்திற்கு பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மம்தா பானர்ஜி, ஐ.மு., கூட்டணியில் குறைந்தளவு மரியாதை கூட எங்களுக்கு அளிக்கப்படவில்லை. மத்திய அரசு முடிவெடுக்கும் முன்னர் எங்களிடம் ஆலோசனை நடத்தவில்லை.
குறைந்தளவு விலை குறைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
மத்திய அரசுக்கு அளித்து வரும் வாபஸ் பெற்றுககொள்கிறோம். வெள்ளிக்கிழமை எங்களது அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள். மக்களை பாதிக்கும் செயல்களை காங்கிரஸ் தன்னிச்சையாக செய்துள்ளது.
நாட்டை விற்க முயற்சி: ஓய்வூதிய மசோதா ஆரம்பநிலையிலேயே எதிர்த்தோம். காங்கிரஸ் மிரட்டும் பாணியை கடைபிடித்தது. சில சமயங்களில் கீழ் பணிய வேண்டிய நிலை ஏற்பட்டது.நாட்டை விற்க ஐ.மு., கூட்டணி முயற்சி செய்கிறது. இதனை நாட்டை நாங்கள் எதிர்த்தோம் என கூறினார்.
பலம் குறைந்தது: மம்தா அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றதையடுத்து மத்திய அரசின் பலம் 254 ஆக குறைந்தது. திரிணமூல் கட்சிக்கு 19 உறுப்பினர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐ.மு., கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 206 எம்.பி.,க்களும், தி.மு.க.,வுக்கு 18 எம்.பி.,க்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 9 எம்.பி.,க்களும், இடம்பெற்றுள்ளனர். மேலும் மற்ற கட்சிகள் சார்பில் 21 எம்.பி.,க்கள் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
காங் கருத்து: மத்திய அரசுக்கான ஆதரவை மம்தா வாபஸ் பெற்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ஜனார்த்தன் திவேதி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை இன்னும் மதிப்பு மிக்க கூட்டணி கட்சியாக கருதுகிறோம். மம்தா வைத்த கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தினோம் என கூறினார். இதனிடையே மம்தா வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து அரசுடன் சோனியா ஆலோசனை நடத்தவுள்ளதாக காங்., கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
நிதிஷ் வரவேற்பு: மத்திய அரசுக்கான ஆதரவு வாபஸ் பெற்ற மம்தாவின் முடிவுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வரவேற்பு தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், மம்தாவின் முடிவு வரவேற்கத்தக்கது என கூறினார்.
மம்தாவிடம் தோற்ற பிரதமர்: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது குறித்து திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் பேச பிரதமர் முயன்ற சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக 3 முக்கிய முடிவுகளை பிரதமர் மன்மோகன் சிங் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.
டீசல் விலை உயர்வு, சமையல் காஸ் சிலிண்டர் கட்டுப்பாடு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு. இதில் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டு கொள்கை முடிவை எடுப்பதற்கு முன்பாக, பிரதமர் மம்தா பானர்ஜியுடன் பேச விரும்பியதாகவும், ஆனால் பிரதமருடன் பேச மம்தா மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று பிரதமர் மம்தாவுடன் பேச முயன்றுள்ளார். அப்போதும் மம்தா அவருடன் பேச விரும்பவில்லை. மேலும், சில காங்கிரஸ் தலைவர்கள் மூலம் மம்தாவை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்துள்ளன. எனினும் எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில், தற்போது மத்திய அரசுக்கான தனது ஆதரவு வாபஸ் முடிவை அறிவித்துள்ளார் மம்தா. |