மத்திய பிரதேசம், சாஞ்சி நகரில் புத்த பல்கலைக்கழக கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த விழாவில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பூட்டான் பிரதமர் லியோன்சென் ஜிக்மே யோசர் தின்லி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சாஞ்சி புத்த பல்கலைக்கழக அடிக்கல் நாட்டுவிழாவுக்கு அழைக்கப்பட்டமைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
இலங்கை ஜனாதிபதியின் பயணம் குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை:
கே : ராஜபக்ச இந்தியாவிற்கு வருவதை எதிர்த்து சேலத்தில் ஆட்டோ ஓட்டுநர் விஜயராஜா என்பவர் 36 பக்கங்களுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்து மாண்டிருக்கிறாரே?
ப : மிகவும் துயரகரமான அதிர்ச்சியைத் தரக்கூடிய நிகழ்ச்சியாகும். எவ்வளவு தீவிரமான பிரச்சினையானாலும் அதற்காக யாரும் தீக்குளித்து தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்வதை கழகம் என்றைக்கும் ஊக்குவித்தது கிடையாது.
இருந்தாலும் விஜயராஜா செய்துள்ள மகத்தான தியாகத்தை மதிக்கிறேன். அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த உயிர்த் தியாகத்திற்குப் பிறகாவது மத்திய அரசு பலமுனை எதிர்ப்புக்கிடையே ராஜபக்ச இந்தியாவிற்கு வருவதைப் பற்றி அக்கறையோடு சிந்திக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு ராஜபக்ச இந்தியாவிற்கு வருவதை உணர்வுள்ள தமிழர்களால் எப்படித்தான் ஏற்றுக் கொள்ள முடியும்?
சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் நல்லுறவு வைத்துக் கொண்டிருக்கும் இலங்கை, இனியும் இந்தியாவுடன் நட்பு நாடாக இருக்குமா என்பதை எண்ணி இலங்கையின் கொடிய அராஜகத்திற்கு இந்தியா ஆதரவு தர வேண்டுமா என்பதை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் நடந்து முடிந்த போரையொட்டி நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த ஆய்வினை ஐ.நா. மன்றத்தின் மனித உரிமை ஆணையம் வரும் ஒக்ரோபர் - நவம்பர் மாதங்களில் மேற்கொள்ள இருப்பதாகத் தெரிகிறது.
அந்த ஆய்வினை நடத்தும் பொறுப்பு இந்தியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னையில் நடைபெற்ற 'டெசோ" மாநாட்டில் நாம் நிறைவேற்றிய தீர்மானங்களை இந்தக் காலக்கட்டங்களில்தான் ஐ.நா. மன்றத்திடம் நாம் ஒப்படைக்கவிருக்கிறோம்.
ஐ.நா. மன்றத்தில் நடைபெறவுள்ள ஆய்வின்போது இந்தியா என்ன நிலைப்பாட்டை மேற்கொள்ளப் போகிறது என்பதை உலகத் தமிழர்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இலங்கையின் ஜனாதிபதி ராஜபக்ச இந்தியாவிற்கு வருவதையும், அவரை இந்தியாவின் சார்பாக வரவேற்பதையும் தமிழனாகப் பிறந்த யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதை மனதிலே கொண்டு இந்திய அரசாங்கம் ராஜபக்சயின் வருகையைத் தடுத்து நிறுத்துவதோடு ஐ.நா. மன்றத்தின் ஆய்வின்போது மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். |