நாட்டில் உள்ள எந்த மாநிலங்களில் வாழும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் உட்பட மத்திய அமைச்சரவை உறுதிபட தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் மூன்றாவது நாளாக பெங்களூர் மற்றும் சென்னையிலுள்ள வடகிழக்கு மாநிலத்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர்.
பெங்களூரிலிருந்து இயக்கப்பட்ட 2 கவுகாத்தி சிறப்பு இரயில்கள் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேற்று புறப்பட்டனர்.
ஒரே நாளில் அதிகமான நபர்கள் புறப்பட்டதால் இரயில்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இரயில்களில் போதுமான இடம் இல்லாததால் படிக்கட்டுகளிலும் கழிவறைகளிலும் அமர்ந்தபடி அவர்கள் பயணத்தை தொடங்கினார்கள்.
அசாம் மாநில கலவரத்தை தொடர்ந்து பெங்களூருவில் வடகிழக்கு மாநிலத்தவர் தாக்கப்படுவதாக தகவல் வெளியானதால் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு உள்ளது என மாநில முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தும் அவர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி சென்றனர்.
15 ஆயிரம் பேர் வெளியேற்றம்
பெங்களூர், மைசூர், மங்களூர் மற்றும் குடகு உள்ளிட்ட நகரங்களிலிருந்து தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் இரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் வெளியேறினர்.
கடந்த 2 நாள்களில் மட்டும் 15 ஆயிரம் பேர் வெளியேறியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 9,718 டிக்கெட் விற்பனையாகி உள்ளதாகவும், 2 சிறப்பு ரயில்கள் கவுகாத்திக்கு புறப்பட்டுச் சென்றதாகவும் மங்களூர் இரயில்வே மண்டல அதிகாரி அனில் குமார் அகர்வால் தெரிவித்தார்.
எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். அனுப்ப தடை
இந்நிலையில், இது தொடர்பான வதந்தி மேற்கொண்டு பரவுவதைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் அடுத்த 15 நாள்களுக்கு தொகுப்பு எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன்படி, ஒவ்வொருவரும் ஒரே தடவையில் 5 எம்.எம்.எஸ்க்கு மேல் அனுப்ப முடியாது.
இது குறித்து, வடகிழக்கு மாநில உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பினர். அப்போது பேசிய பிரதமர் மன்மோகன் சிங், வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


|